Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
2026 ஜனவரி மாதம் புதிய கால அட்டவணையை வெளியிட தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வேயில் உள்ள பல்வேறு வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலும், தாமதத்தை குறைக்கும் வகையிலும் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ரெயில் சேவைகளை மேம்படுத்துவதிலும், ரெயில்கள் தாமதம் இல்லாமல் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக நவீன சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தி வருகிறோம்.
மேலும், முக்கிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜின்களை மாற்ற வேண்டியம் அவசியம் இல்லை. இதேபோல, கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும், ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் வந்துள்ளது.
அந்த மனுக்களைப் பரிசீலனை செய்து வருகிறோம். இதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
2026-ம் ஆண்டிற்கான புதிய கால அட்டவணை இந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட்டு, ஜனவரி 1-ந்தேதி அமல்படுத்தப்படும்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் போது சென்னை-கோவை, சென்னை-கன்னியாகுமரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் தற்போதுள்ளதை காட்டிலும், 40 நிமிடங்கள் வரை சேமிக்க முடியும். இது தொடர்பான ரெயில்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b