Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 18 டிசம்பர் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட் இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கில், மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சத்தீஸ்கர் காடுகளில் தொடர் என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுகின்றன. அடுத்தடுத்து நக்சலைட்டுகள் சரணடைவதாகச் செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோலப்பள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ரிசர்வ் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 18) காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சுக்மா மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சவால் தெரிவித்தார். அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் சுக்மா, பிஜப்பூர், தாண்டிவாடா உள்பட 7 மாவட்டங்களில் 255 பேர் மற்றும் 27 பேர் கரிதாபாத் மாவட்டத்திலும், சவுக்கி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b