ஜித்தா-கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு - கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்
கேரளா, 18 டிசம்பர் (ஹி.ச.) சவுதி அரேபியாவின் ஜித்தாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் வெடித்ததால், விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்
விமானம்


கேரளா, 18 டிசம்பர் (ஹி.ச.)

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் வெடித்ததால், விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டிருப்பதை அறிந்த விமானி கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி அவசர அவசரமாக கொச்சி நெடுமாஞ்சேரி விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருக்கும் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

இது குறித்து கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

தகவல் கிடைத்தவுடன், அனைத்து அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்தோம். காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அதன்பிறகு, ஆய்வு செய்த போது, விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்திருந்தன. என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam