Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் வேளாண்துறை தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக எதிர்மறை வளர்ச்சியில் உள்ளது எனது அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித்துறையும், சேவைத்துறையும் தான் 97%க்கும் கூடுதலாக பங்களித்துள்ளன.
அத்துறைகளை சார்ந்திருக்கும் மக்கள்தொகையின் அளவு 40% மட்டும் தான். அதனால், அத்துறையை சார்ந்திருப்போரின் பொருளாதார நிலை பெருமளவில் மேம்படும். ஆனால், மிகக்குறைந்த அளவில் பங்களித்துள்ள வேளாண்துறையை சார்ந்திருக்கும் மக்களின் அளவு 60% ஆகும்.
வேளாண் உற்பத்தி மதிப்பான ரூ.51,862.76 கோடியை தமிழக மக்களில் 60 விழுக்காட்டினரான 4.80 கோடி பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.10,804 ஆக இருக்கும்.
இது சேவை மற்றும் உற்பத்தித் துறையினரின் சராசரி ஆண்டு வருமானமான ரூ.5.25 லட்சத்துடன் ஒப்பிடும் போது 50 மடங்கு குறைவு ஆகும். பொருளாதார அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருப்பது தான் திமுக அரசின் வேதனையான சாதனை ஆகும்.
தமிழ்நாட்டில் வேளாண்துறை வளர்ச்சிக்குத் தேவையான பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்குதல், இடுபொருள் மானியம் வழங்குதல், அனைத்து விளைபொருள்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளத் தவறியதன் விளைவு தான் வேளாண்துறை இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள திமுக அரசு, அதை மூடி மறைத்து மக்களை ஏமாற்ற முயல்வதை மன்னிக்க முடியாது. மோசடிகளை அரங்கேற்றுவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசு, அந்த வழக்கத்தைக் கைவிட்டு, வேளாண்துறை வீழ்ச்சியை ஒப்புக்கொள்ள வேண்டும்; கடந்த கால பாவங்களைப் போக்க பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam