Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி நகர பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு 24-12-2025 அன்று மாலை நடைபெறவிருக்கும் கேரல் ஊர்வலம் தொடர்பாக, பண்டிகையினை கொண்டாடும் மக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டியும், கேரல் ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கு எவ்வித பிரச்சனைகளும் எற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்தான நடவடிக்கையில் ஒவ்வொரு கேரல் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தலைமையில் 26-11-2025 அன்றும், தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சி. மதன் தலைமையில் 12-12-2025 மற்றும் 15-12-2025 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை எடுத்துரைத்தும், முக்கியமாக உயரமான கேரல் அமைப்புகள் சாலையில் உள்ள உயர் மின் அழுத்த வயர்களில் உரசி மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, கேரல் வாகனத்தின் உயரம் மின்வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவாறு தரையிலிருந்து சுமார் 10 அடி மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், அதுபோலவே அவ்வப்போது உயரத்தை கூட்டி குறைக்கும் கிரேன் (Crane) மற்றும் Hydraulics அமைப்புகளுடன் கூடிய வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது, வாகனத்தின் மேற்கூரையில் ஏறிச்செல்லக் கூடாது, ஒலிபெருக்கிகளை அதிக சத்தத்துடன் பயன்படுத்தக்கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 06.00 மணி முதல் இரவு 10.00-க்குள் கேரல் ஊர்வலத்தை நடத்தி முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை முழு அளவில் செயல்படுத்திட, தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தைகளை ஒருங்கிணைத்து 16-12-2025 அன்று காலையும் சமூக செயற்பாட்டாளர்களுடன் 16-12-2025 அன்று மாலையும் சமுதாய தலைவர்களுடன் 17-12-2025 அன்றும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேற்படி விதிமுறைகள் உட்பட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படும் அனைத்து விதிமுறை மற்றும் வழிமுறைகளை கடைபிடித்திடுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ