Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
100 நாள் வேலைதிட்டத்தில் மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!
நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி!
அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்?
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி நிர்ணயம் மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் விகாசித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும்.
தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக விகாசித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டத்தை பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன். என பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam