Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்-கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி 36 கோடி ரூபாயும், செல்வ வரி பாக்கி 10 கோடியும் என மொத்தம் 46 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர், 36 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டும் எனவும், கடைசியாக 13 கோடி ரூபாயும் செலுத்தக் கூறி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருப்பதாகவும், மறைந்த முதல்வர் மீதான வழக்கில் வருமான வரித்துறை இவ்வாறு செயல்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். யாரும் எந்த சிறப்பு சலுகையும் கோர முடியாது எனத் தெரிவித்தார்.
எவ்வளவு வரி பாக்கி செலுத்த வேண்டுமென கணக்கு விவரங்களை சரிபார்த்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ