Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 18 டிசம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும் இந்த ஆஞ்சநேயர் சாமியை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகை தருகின்றனர்.
மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவரித்ததாக கூறப்படுகிறது. அந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படும்.
அதன்படி நாளை
(டிசம்பர் 19ம்தேதி) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் விரதமிருந்து ஆஞ்சநயரை வழிபட்டால், ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
அதன்படி நாளை (வெள்ளி) ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடக்கின்றன. மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவியப்பொடி (களபம்), பன்னீர், தேன், பால், அரிசி மாவுப்பொடி, விபூதி, தயிர், எலுமிச்சை சாறு, குங்குமம், சந்தனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகிய 16 வகையிலான பொருட்கள் மூலம் ஷோடச அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு இந்த அபிஷேகங்கள் தொடங்குகின்றன.
முன்னதாக காலை 5 மணிக்கு, ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரே உள்ள ஸ்ரீராமர் சன்னதியில் அபிஷேகங்கள் நடக்கின்றன. பின்னர் மதியம் 12 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.
மாலை 6.30க்கு பஜனை நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கோயிலில் அன்னதானம் தொடங்குகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
மேலும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வடைமாலையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஜாண்சி ராணி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b