Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 18 டிசம்பர் (ஹி.ச.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் புதுச்சேரியில் இன்று
(டிசம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
புதுச்சேரி மாநிலக் குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாட்டு மக்களை நடுங்க வைக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய மசோதாக்களை தாக்கல் செய்து மக்கள் மீது ஏராளமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டனர். இந்த திட்டத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு நிதி பங்களிப்பு 60 சதவீதம், மாநில பங்களிப்பு 40 சதவீதம் என மாற்றிவிட்டனர். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வருகிற டிசம்பர் 23-ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு உலக மகா ஊழல் அரசாக மாறி இருக்கிறது. போலி மருந்து தயாரித்து பல மாநிலங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான முதல்வர் ரங்கசாமி இதுவரை தெளிவான பதில் கொடுக்கவில்லை.
இதற்கு முழு பொறுப்பேற்று ரங்கசாமி அரசு பதவி விலக வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதனை வலியுறுத்தி மாநில முழுவதும் பிரசாரமும், ஜனவரி 5-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டமும் நடத்துவது என்று தீர்மானித்துள்ளோம்.
மேலும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், புதுச்சேரியில் மின்கட்டணத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்தி இருக்கிறார்கள். இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? எங்கு பார்த்தாலும் ஊழல், முறைகேடுதான் நடக்கிறது. இதுதான் இந்த அரசின் சாதனை.
திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கத்துக்கு நல்ல இலக்கணமாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. அந்த இடம் முருகரின் ஆறுபடை வீடுகளில் ஒரு தளமாக இருப்பது மட்டுமல்லாமல் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் காலம் காலமாக வழிப்படக் கூடிய இடமாக திருப்பரங்குன்றம் உள்ளது.
அந்த இடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். காலம் காலமாக எங்கு தீபம் ஏற்பட்டதோ, அங்கு மக்கள் தீபத்தை ஏற்றி வழிபட்டு செல்கிறார்கள்.
அந்த தீபத் தூண் பல்வேறு மலைகளை அளப்பதற்கு வைத்த அளவை கல். அங்கு எந்தக் காலத்திலும் தீபம் ஏற்றியது கிடையாது. இந்த விவகாரத்தில் மனு போட்டவருக்கும், நீதிபதிக்கும்தான் பிரச்சினையாக உள்ளது. பொது மக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிப்பாக போட்டியிம். எல்லா கட்சியும் நடத்துவது போன்றே ஈரோட்டில் விஜய் கூட்டம் நடத்துகிறார். இதெல்லாம் தேர்தலில் பிரதிபலிக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது.
தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. யாரை பார்த்தும் பயப்படவில்லை. பாஜக - அதிமுக கூட்டணி தான் பயந்து போயுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையப் போகிறது. இந்தக் கூட்டணி தேர்தலில் 3-வது இடத்துக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
புதுச்சேரியில் பாஜகவின் பி டீம் தான் ஜோஸ் சார்லஸ் மார்டின். பாஜக துணையோடுதான் மார்டின் தொழில் இந்தியா முழுவதும் நடக்கிறது. அவர் என்ன நோக்கத்துக்காக புதுச்சேரியில் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று தெரியவில்லை.
ஏற்கெனவே முதல்வர் ரங்கசாமியும், பாஜகவும் கூட்டணியில் இருக்கின்றனர். ஒருவேளை ரங்கசாமி கூட்டணியில் நீடிக்க மாட்டார் என்று நினைத்து ஜோஸ் சார்லஸை கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தேர்தல் நெருக்கத்தில் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்.
பணத்தை மட்டுமே வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அது பலனளிக்காது. தமிழக, புதுச்சேரி மக்களை பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்பது நடைமுறைக்கு உதவாது.
இந்தியா முழுவதும் நாங்கள் எங்கும் பணம் செலவிடுவதில்லை. கேரள உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக இடதுசாரிகள் அணிதான் அதிக இடங்களில் வந்துள்ளது. திருவனந்தபுரம் ஒரு இடத்தில் தோல்வி அடைந்ததை மட்டும் வைத்துக்கொண்டு பாஜகவுக்கு அங்கு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்றும், இடதுசாரிகள் தோல்வி அடைந்தள்ளனர் என்றும் பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் - பாஜக எலியும், பூனையுமாக இருக்கின்றனர். ஆனால் கேரளத்தில் மட்டும் அவர்கள் இருவரும் உள்ளார்ந்த உறவு கொண்டுள்ளனர்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ