Enter your Email Address to subscribe to our newsletters

இந்தியா, 18 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் அடையாளமாகவும், மீனவர்களின் காவல் தெய்வமாகவும் விளங்கும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்முறை திருவிழாவானது பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. பிப்ரவரி 27 (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது.
அன்றைய தினம் சிலுவைப் பாதை மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும். பிப்ரவரி 28 ந்தேதி (சனிக்கிழமை) காலை திருவிழாத் திருப்பலி மற்றும் தேர்ப் பவனி நடைபெற்று, கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் பேரழிவு காரணமாக நிலவிய அசாதாரண சூழலுக்குப் பிறகு, தற்போது நிலைமை சீராகி வருவதைத் தொடர்ந்து, திருவிழாவிற்கான முதற்கட்டப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. இதில் கடற்படை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பங்குத்தந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்தும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வது வழக்கம். கடந்த ஆண்டுகளை விட இம்முறை அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர், சுகாதாரம் மற்றும் படகுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புப் பரிசோதனைகள் குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam