Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 18 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனால் வரும் டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இருந்து தூத்துக்குடி வந்தடைய வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும். மறுமார்க்கமாக அதே எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்திலிருந்தே புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த பொதுமக்கள், சீரமைப்புப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் தங்களுக்கு கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தூத்துக்குடி வந்து செல்வதற்கு பேருந்து வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையை ஏற்று வரும் டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் மைசூர் ஆகிய ஊர்களில் இருந்து கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சிக்கு வந்தடையும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தூத்துக்குடி வருவதற்கு வசதியாக கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் குறிப்பிட்ட 3 நாட்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை தூத்துக்குடி வந்தடைவதற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b