Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், இந்திய வேதியல் சங்கத்தின் 62-வது ஆண்டு வேதியியலாளர் மாநாடு மற்றும் நெட் சீரோ இலக்கு, நிலைத்தன்மை, பசுமை ஆற்றல், வட்டப் பொருளாதாரம் – இந்தியாவின் வளமைக்கு ஆற்றல் பங்கு என்ற பொருளில் அனைத்துலக மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராக பால்வளம் மற்றும் பால் மேம்பாட்டு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாநாட்டைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, கன்னியாகுமாரி மாவட்டத்தில் முன்பு இருந்த ஆட்சியில் அதிக அளவு கல்குவாரிகள் இயங்கின; தற்போது உங்கள் ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்,
உண்மை ஒன்று, பிரச்சாரம் ஒன்று என்ற நிலை உள்ளது என்பதே எனக்கு மிகுந்த வருத்தம். கன்னியாகுமாரி மாவட்டத்தில் நான் அமைச்சராக பதவி ஏற்கும் முன்பு 44 கல்குவாரிகள் இருந்தன. இன்றைக்கு நான்கு கல்குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மொத்தம் 39 கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த ஆண்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பாதுகாத்து முழுமையான வளர்ச்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நர்சரிகள் உருவாக்கப்பட்டு, மரக்கன்றுகளை ஆறு அடிவரை வளர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து பேசிய அவர்,
விமான நிலையம் அமைக்க சுமார் 200 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் சில சிக்கல்கள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ