பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
நெல்லை, 18 டிசம்பர் (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டியது. மேலும் கடுமையான குளிரும் வா
Papanasam Dam


நெல்லை, 18 டிசம்பர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டியது. மேலும் கடுமையான குளிரும் வாட்டி வதைத்து வருகிறது.

குறிப்பாக நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் தலா 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. காக்காச்சி எஸ்டேட் பகுதியில் 12 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 10 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

அணைகளை பொறுத்தவரை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 128 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு நேற்று வினாடிக்கு 839 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இரவு முழுவதும் மழை பெய்ததால் நீர் வரத்து 3 மடங்கு அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் 26 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மமட்டம் இன்று 1 அடி உயர்ந்து 108 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 983 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 4 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 18 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 5 1/2 அடி உயர்ந்து 141 1/2 அடியை எட்டியுள்ளது.

மாநகர பகுதி முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்போது இதமான சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. மாவட்டத்தை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அம்பாசமுத்திரம், நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN