Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 18 டிசம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு பயிலும் பிரசித் பாலன் என்ற மாணவன் பள்ளியில் சிறப்பு வகுப்பின் போது விளையாட்டு மைதானத்தில் நடந்து சென்ற போது, பழமையான ஒரு நாணயத்தை கண்டுபிடித்தார்.
இதை, பள்ளியின் தலைமை ஆசிரியர் அகமது பெய்சலிடம் கொடுத்துள்ளார். அவர் இதனை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவிடன் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜகுரு ஆய்வு செய்து அது குறித்து கூறியதாவது:
இந்த நாணயமானது முதலாம் ராஜராஜ சோழன் பெயர் பொறித்த செம்பால் செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நாணயமாகும். அதாவது, கி. பி. 985 முதல் 1012- ஆம் ஆண்டைச் சேர்ந்த, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாணயமாகும்.
பெரும்பாலும் பழைய கால வரலாறு, பண்பாடு தொடர்பான ஆய்வில் இது போன்ற காசுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையில் முதலாம் ராஜராஜ சோழனின் வெற்றியின் பின்னணியில் சிறப்பு வெளியீடாக இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயமானது முதலாம் ராஜராஜ சோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. முதலாம் ராஜராஜன் காலத்தில் செம்பு, வெள்ளி, தங்கம் ஆகியவற்றில் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இந்த காசுகள் சோழர்கள் ஆண்ட நாடுகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது. தற்போது, ராமநாதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சோழர் காலத்து நாணயத்தின் ஒரு பக்கத்தில் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்கிறார். அவரது இடது பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. வலது பக்கம் திரிசூலம் மற்றும் விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்து இருக்க, அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீ ராஜராஜ” என்று மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காசில் பாசிகள் படர்ந்து இருப்பதால் மற்ற எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை.
அந்த காசின் ஓரங்கள் தேய்ந்து காணப்படுகிறது. இலங்கையில் பயன்படுத்தப்பட்ட சோழர் காலத்து காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை சார்ந்த ஊர்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஊரின் உள் பகுதியிலும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது வரலாற்று முக்கியத்துவத்தை பெறுகிறது என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN