Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (டிசம்பர் 18) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் 718 கோடி ரூபாய் முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள Schneider நிறுவனத்தின் ஆலைகளின் விரிவாக்கம் மற்றும் ஓசூரில் Schneider Electric IT Business India Private Limited (SEITB) நிறுவனத்தின் மின்கலன்கள் மற்றும் குளிர்விப்பு தீர்வுகளுக்கான புதிய ஆலை அமைக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் மின் மேலாண்மை தீர்வுகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 30 வருடங்களாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இக்குழுமம், தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்மார்ட் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்தவும், ஓசூரில் ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலை நிறுவவும் முதலமைச்சர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம், ஏற்றுமதியை ஊக்குவித்து, உள்ளூர் உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சியை வலுப்படுத்த ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது, ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்தின் துணைத் தலைவர் அன்ஷும் ஜெயின், நிதி இயக்குநர் சுனில் சத்யப்ரகாஷ், சென்னை வளாகத்தின் தலைவர் விஸ்வநாதன் பொன்னுசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b