Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 18 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 41 பேர் பலியாகினர். இந்த கூட்ட நெரிசல் நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று (டிசம்பர் 18) தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்துகிறார். இதற்காக இன்று காலை 9:30 மணிக்கு, விஜய் கோவை வருகிறார்.
சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு அரை மணி நேரம் கட்சியினரை சந்திக்க உள்ளார்.
அதன் பின்னர் விஜய், காலை 11:30 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு புறப்படுகிறார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இன்று நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
காலை 8 மணி முதல் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில் முன்பாகவே அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தவெக தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். முதல் வரிசையில் இடம்பிடிக்க முண்டியடிக்கும் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக தொண்டர்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் தவெக தொண்டர்கள் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 25 ஆயிரம் பேரும் கலந்து கொள்வார்கள் என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b