Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்த கட்டமாக தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைதொடர்ந்து பாஜக சார்பில் தமிழகத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நியமிக்கப்பட்டனர். தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகிற 23-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
எனது பரப்புரைப் பயணம் ஜனவரி 9-ம்தேதி நிறைவு பெறுகிறது. பரப்புரை நிறைவுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தருவார்கள். நாளையே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
5 ஆண்டு கால ஆட்சியில் திமுக சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்திருக்கின்றன. 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகிற 23-ந்தேதி தமிழ்நாடு வர இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b