Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏழ்மையான நிலையில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வின் வழியாக பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய தொழிற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியை தொடர்வதற்கு
முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி நிதியுதவி பெற விரும்புவோர் அரசின் ஒற்றைச் சாளர முறையில் (கவுன்சிலிங்) கல்லூரி சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் அந்தந்த தாலுகாக்களில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரிடம் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக பெறப்பட்ட இட ஒதுக்கீடு சான்று,வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, குடும்ப உறுப்பினர் சான்று (குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வித் தகுதி மற்றும் வருமானம் ஆகிய விவரம்), பிறப்பிட சான்று, கல்லூரி பதிவாளரிடம் பெறப்பட்ட 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறவில்லை மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று, கல்லூரி கட்டணம் குறித்த நகல், ஆதார், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b