Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக உள்ள ஆயிரத்து 439 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
தமிழ்நாட்டில் கடந்த 2020&-ஆம் ஆண்டில் தொடங்கி 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 1439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில் கனிமக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எந்த வகையிலும் தண்டிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. கனிமக் கொள்ளையர்களை திமுக அரசு பாதுகாப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த 6 ஆண்டுகளில் 1439 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்ட நிலையில் வெறும் 135 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதையும், தண்டிக்கப்பட்டவர்களின் விவரங்களை தெரிவிக்காததையும் வைத்துப் பார்க்கும் போது, சட்டவிரோத குவாரி நடத்திவர்களின் பெரும்பான்மையினரை வழக்கே பதிவு செய்யாமலும், இன்னும் சிலரை வழக்கு பதிவு செய்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்காமலும் திமுக அரசு தப்பிக்க விட்டிருக்கிறது என்று தான் புரிந்து கொள்ள முடிவதாக இயற்கைவள ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் மட்டும் திமுக ஆட்சியில் குறைந்தது ரூ.1000 கோடிக்கு கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்துக்கும் காரணமான எவரும் தண்டிக்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களுக்கான இழப்பீடும் பெறப்படவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக தென் மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளைக்கு காட்பாதராக இருப்பவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அரசிலும், அரசியலிலும் பதவிகளை வழங்கி திமுக ஊக்குவிக்கிறது. இதிலிருந்தே கனிமக் கொள்ளையர்களுக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கனிமவளக் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக கடந்த நவம்பர் 2&ஆம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பி.யு.சி.எல் அமைப்பின் பொதுச்செயலாளருமான வி.சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கனிமவளக் கொள்ளையர்கள் மாஃபியாக்களைப் போல செயல்படுகிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. இயற்கையை அழித்து கனிமவளக் கொள்ளையருக்கு துணை போகும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam