Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 டிசம்பர் (ஹி.ச.)
கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் குறித்து பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். சிலர் புதிதாக வந்து கோவையை “மஞ்சள் நகரம்” என கண்டுபிடித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. மஞ்சளுக்கென தனி வாரியம் அமைத்து உள்ளதே பா.ஜ.க என்பதைக் குறிப்பிட்டார்.
பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது. தி.மு.க அரசு ஆட்சியில் மக்களின் குரல் வளை நெரிக்கப்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ள நிலையில், அதற்கு ஸ்டாலின் அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். அந்த விவகாரத்தில் நீதிபதியின் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்படுகின்றன. இதற்கான பதில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் கிடைக்கும் என கூறினார். திருப்பரங்குன்றம் விஷயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஈகோ பிரச்சனை இருப்பதாகவும் விமர்சித்தார்.
நடிகர் விஜய் குறித்து பேசுகையில்,
விஜய் டிக்கெட் வாங்கித்தான் மக்கள் இணைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது தி.மு.க எதிர்ப்பை நான் வரவேற்கிறேன்” என்றார். தி.மு.க எத்தனை இடங்களுக்கு காந்தி பெயரை வைத்து உள்ளது என்றும் கேள்வி எழுப்பிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அதிக ஊழல் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் என்ன புரிந்து கொள்கிறார்? எத்தனை விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன என்பது அவருக்கு தெரியுமா ?” என கேள்வி எழுப்பினார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தி.மு.க ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அந்த நிலைமையை விஜய்யும் சொல்ல வேண்டிய சூழல் வந்து உள்ளது.என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J