Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வந்தே மாதரம் விவகாரம், திருப்பரங்குன்றம் சர்ச்சை ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
குறிப்பாக, 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிசம்பர் 19) நிறைவு அடைந்தது. இரு அவைகளும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதன் மூலம் 19 நாட்கள் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது.
முதலில் லோக்சபாவை கால வரையின்றி ஒத்திவைத்த சபாநாயகர் ஓம்பிர்லா நிறைவு உரையில், அவையின் செயல்பாடு 111 சதவீதம். மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற்றது. அவையின் சுமூகமான செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி, என்றார்.
அதைத் தொடர்ந்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. அவை தலைவர் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது நிறைவுரையில் கூறியதாவது:
அவை 92 மணி நேரம் செயல்பட்டது. அவையின் செயல்பாடு 121 சதவீதம். இந்தக் கூட்டத்தொடரின் போது 59 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடந்தது. வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவையொட்டி அவையில் ஒரு சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தில் 82 எம்பிக்கள் பங்கேற்றனர். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அவையில் ஒரு விவாதம் நடத்தப்பட்டது. அதில் 57 உறுப்பினர்கள் நாட்டின் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவது குறித்த தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நேற்றைய அமர்வின் போது எதிர்க்கட்சி எம்பிக்களால் உருவாக்கப்பட்ட இடையூறுகள் கவலை அளிக்கிறது.
முழக்கமிடுவது, பதாகைகளைக் காண்பிப்பது, விவாதத்திற்குப் பதிலளிக்கும் அமைச்சருக்கு இடையூறு செய்வது, காகிதங்களைக் கிழித்து அவையின் மையப்பகுதியில் வீசுவது ஆகியவற்றை எம்பிக்கள் எதிர்க்காலத்தில் செய்யக் கூடாது. இதுபோன்ற ஒழுங்கற்ற நடத்தைகளை மீண்டும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தொடரின் நிறைவு நிகழ்ச்சியாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி.ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / vidya.b