Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்ற தொகுதிவாரியாக ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பை நிகழ்த்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்று வருகிற இந்த சந்திப்பில் பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பின் போது, ஆட்சியின் மீது ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கிற பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்தும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்தும் கேட்டறிந்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வருகிற திட்டங்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்.
நிர்வாகிகள் முன்வைக்கிற கோரிக்கைகளுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்றைய
(டிசம்பர் 19) ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
Hindusthan Samachar / vidya.b