Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 டிசம்பர் (ஹி.ச.)
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் ரஷ்ய படையில் இணைந்து பணியாற்றிய இந்தியர்கள் 26 பேர்வரை பலியாகி உள்ளதாகவும் 7 பேர் காணாமல் போனதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:
கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் வெளிநாட்டவர்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா ராணுவத்தில் 36 ஆப்ரிகா நாடுகளை சேர்ந்த 1,426 பேர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த 202 பேர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையை அடுத்து 119 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். போரில் ஈடுபட்டு 26 பேர் வரை பலியாகி உள்ளனர். 7 பேர் வரை காணாமல் போய் உள்ளனர். மீதம் உள்ளவர்களையும் விடுவிக்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போரில் பங்கேற்று இறந்த 10 இந்தியர்களின் உடல்கள் இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவி செய்துள்ளது. இரண்டு இந்தியர்களின் உடல்கள் அங்கேயே தகனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இறந்ததாகவோ காணாமல் போனதாகவோ அறிவி்க்கப்பட்ட 18 இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் பகிரப்பட்டு உள்ளன. ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக பயண ஆவணங்களை எளிதாக்குவது மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை வெளியுறவுத்துறை அமைச்சகமும், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகமும் செய்து வருகிறது.
ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிபோவ் இந்த விவகாரம் 'இரு தரப்பினருக்கும் ஒரு தீவிரமான கவலை' என்று கூறி உள்ளார். ரஷ்ய ராணுவம் இந்தியர்களைப் பணியமர்த்துவதில்லை என்றும், 'ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து அவ்வாறு செய்துள்ளனர்.
என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM