Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 19 டிசம்பர் (ஹி.ச.)
பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 8 வருடங்களுக்குப் பின் கடந்த 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் பல்சர் சுனில்குமார், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் 2வது குற்றவாளியான மார்ட்டின் ஆண்டனியின் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறும் மார்டின், பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி, அவருக்கு எதிராக சில அவதூறு கருத்துக்களை பேசும் சில காட்சிகளும், தீர்ப்பில் நீதிபதி தெரிவித்த சில கருத்துக்களும் அந்த வீடியோவில் உள்ளன. மார்ட்டின் ஆண்டனி ஜாமீனில் இருந்த போது இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த வீடியோவை தடை செய்ய வேண்டும் என்றும், இதை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பாதிக்கப்பட நடிகை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
மேலும் முதல்வர் பினராயி விஜயனை அவர் சந்தித்த போதும் இது தொடர்பாக அவர் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை வெளியிட்ட மார்ட்டின் ஆண்டனி மற்றும் பகிர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீர்மானித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ பகிர்ந்ததாக 27 சமூக வலைதள கணக்குகளை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் வீடியோ பகிர்ந்ததாக கண்டறியப்பட்டுள்ள 27 சமூக வலைதள கணக்குகளுக்கு சொந்தமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam