Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
இதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இரவு 7 மணியானதால் போராட்டத்திற்கான அனுமதி நேரம் முடிந்ததாகக் கூறி போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
இருப்பினும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் பேருந்து மூலம் அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
ஆனால், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராடுவோம், நிறைவேறாமல் கலைய மாட்டோம் எனக் கூறி மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மீண்டும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN