Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 19 டிசம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று
(டிசம்பர் 19-ம் தேதி) மதியம் 12 மணியளவில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்தை டெல்லி தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த அஜய் திவான் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் தவெக அனுமதி கேட்ட கரூர் லைட் ஹவுஸ் முனை, பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, போராட்டங்களுக்கு போலீஸார் அனுமதி வழங்கும் தலைமை அஞ்சலகம் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிபிஐ எஸ்.பி.பிரவீண்குமார், கரூர் டிஎஸ்பி செல்வராஜ் ஆகியோர் இது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். ஆய்வுக்கு பிறகு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு இன்று (டிச.19-ம் தேதி) கரூர் மாநகராட்சி மாநகரமைப்பு அலுவலர், ஆய்வாளர், சுகாதார அலுவலர், தமிழ்நாடு மின் வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராகினர்.
Hindusthan Samachar / vidya.b