Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 19 டிசம்பர் (ஹி.ச.)
இலங்கைக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கை நாட்டிற்கு தங்கம், கஞ்சா, அபின், பிரவுன் சுகர், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது கடலோர பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதியில் சுங்கத்துறையினரும் மத்திய புலனாய்வு பிரிவினரும் (CIU) இந்திய கடலோர காவல் படையினரும் இணைந்து தீவிர கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு நாட்டுப்படகை சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில், இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 9 கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயில் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆயிலின் சந்தை மதிப்பு ரூ.12 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும், சுங்கத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் அணுகுவதற்கு முன்பே கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருள் சூழ்ந்த நேரத்தில் தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து, தப்பியோடிய கடத்தல்காரர்களை அடையாளம் காணவும், இந்த கடத்தல் பின்னணியில் செயல்படும் பெரிய கும்பலை கண்டறியவும் விரிவான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், தமிழக கடலோர பகுதிகளை பயன்படுத்தி நடைபெறும் கும்பலின் செயல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN