சொத்து கிரையம் விவகாரம் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
திருப்பூர், 19 டிசம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தனது சொத்தை தனக்கே தெரியாமல் கிரையம் செய்து கொடுத்ததாக பத்திரப்பதிவுத்துறை மற்றும் நில அளவைத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து, அவர்கள்
Assets Protest


திருப்பூர், 19 டிசம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தனது சொத்தை தனக்கே தெரியாமல் கிரையம் செய்து கொடுத்ததாக பத்திரப்பதிவுத்துறை மற்றும் நில அளவைத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செல்வராஜ் தெரிவித்ததாவது, தாராபுரம் நகர் காந்திபுரம் பகுதியில் வார்டு – 6, பிளாக் எண்: 14-ல் அமைந்துள்ள நகரளவை எண்: 825, 834-க்கு உட்பட்ட வீடு மற்றும் வீட்டுமனை இடம், தனது தந்தையின் தந்தையும், தனது அப்பாவுமான காலஞ்சென்ற கருப்பநாயக்கருக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட சொத்தாகும்.

இந்த சொத்து தொடர்பாக தாராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதில் தனக்கு 3-ல் ஒரு பங்கு சொத்து வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும், தனது பங்கு நிலத்தை அளவீடு செய்து அத்துமால் காண்பிக்க நிலஅளவைத்துறையினர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

நில அளவீடு செய்ய தேவையான கட்டணத்தையும் செலுத்தியுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியமாக நடந்து வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் கூறினார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படுவது தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, நீதிமன்ற தீர்ப்பின்படி தன்னுடைய 3-ல் ஒரு பங்கு நிலத்தை உடனடியாக அளவீடு செய்து வழங்கவும், தனது சொத்தை தனக்கே தெரியாமல் கிரையம் செய்ததாக குற்றம்சாட்டப்படும் பத்திரப்பதிவுத்துறை மற்றும் நிலஅளவைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபிலிக்ஸ் ராஜாவிடம் மனு கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN