Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டம் - வாழ்வாதாரத்திற்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தம் சாலையில் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான செவிலியர்களை உரிய நேரத்தில் பணி நிரந்தரம் செய்யத்தவறிய சுகாதாரத்துறையின் அலட்சியமே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னரும் விடிய, விடியப் போராட வேண்டிய சூழலுக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும், தங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ