Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச)
மழை பாதிப்புகளை வேடிக்கை பார்க்கும் பொம்மை முதல்வர் என முதலமைச்சர் முக ஸ்டாலினை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘பருவமழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வைத்து விட்டோம் என்றெல்லாம் போலி வசனம் பேசிய திமுக அரசின் அடிமைகள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என கேட்கிறேன்.
டெல்டா மாவட்டத்தில் அடித்து ஊற்றும் மழையால் பயிர்கள் மீண்டும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. கடலூர், திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகி விட்டன. நெல்லை பகுதிகளில் வாழை நசிந்து விட்டது.
சென்னையிலோ கேட்கவே வேண்டாம். வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோயம்பேடு, வியாசர்பாடி என எல்லா பகுதிகளிலும் வெள்ளம் ஆறாக வழிந்தோடுகிறது. குண்டும் குழியுமான சாலைகளில் போக்குவரத்தும் மெதுவாக ஊர்கிறது. தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய திரு. @mkstalin அவர்களே, சொத்துவரியை மட்டும் 300 % வரை ஏற்றி மக்களின் வேதனையை கூட்டிய உங்களுக்கு அவர்களுக்கான நல்ல சாலைகளை அமைக்க வேண்டும் எனும் அடிப்படை கடமை உணர்வு கூட கிடையாதா?
கடந்த நான்கரை ஆண்டுகளில், நீங்களும் உங்களது அரசும் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு சொந்த நலன் பற்றி மட்டுமே சிந்தித்து தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். மக்கள் நலன் மீது அக்கறை காட்டியிருந்தால் இப்படியொரு இருண்ட ஆட்சியில் துன்பமுறும் அவலம் மக்களுக்கு வாய்த்திருக்காது. எங்கே எது நடந்தால் எனக்கென்ன? நான் கோட்டையில் அமர்ந்தபடியே எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் எனும் உங்களது கையாலாகாத்தனம் மீண்டும் மீண்டும் நீங்கள் ஒரு பொம்மை முதல்வர் என்பதையே நிரூபிக்கிறது.
விரைவில் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து உங்களது அகம்பாவப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது உறுதி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ