Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,86,732 பேர் பயனடைந்துள்ளனர்.
அந்தவகையில் இத்திட்டம் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (டிச 02) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வருகை தரும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட போதுமான அளவிற்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் முதல்வர் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து, மக்களுக்கு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தனியாக அறை ஏற்படுத்திட வேண்டும் என்றும், வருகை தரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களில் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் இம்முகாம்களில் நோய் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர்முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச்செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b