Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 டிசம்பர் (ஹி.ச.)
நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப் பெரிய வங்கி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 2026 - 27ம் நிதியாண்டிற்குள் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:
தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வலுவான நிதி நிலை கொண்ட, நான்கு பெரிய வங்கிகளாக மாற்ற நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய பெரிய வங்கிகளை உருவாக்கவும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான பெரிய கடன்களை வழங்கும் திறனுள்ளதாக மாற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இணைப்புக்கு பின் எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கியும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்த புதிய வங்கி, என நான்கு வங்கிகள் மட்டுமே செயல்படும்.
கனரா வங்கியும், யூனியன் வங்கியும் இணைந்த வங்கியுடன் இந்தியன் வங்கி, யூகோ வங்கி ஆகியவையும் இணைக்கப்படலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை மீதமுள்ள பெரிய வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி அல்லது பேங்க் ஆப் பரோடா உடன் இணைக்கப்படும். பஞ்சாப் அண்டு சிந்து வங்கி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
இத்திட்டம் முதலில் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கோரப்படும். செபியிடமும் கருத்து கேட்கப்பட்ட பின் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு தெரிவித்தன.
இந்த நடவடிக்கைகள், வங்கி கிளைகளின் செயல்பாட்டை சீரமைக்கவும், தேவையற்ற கூடுதல் செலவுகளை குறைக்கவும், மூலதனத்தை மிக சிறப்பாக பயன்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2017 - 2020 காலகட்டத்தில் 21ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை இணைப்பு நடவடிக்கைகளுக்கு பின் 12ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM