Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில் தங்க பல்லி, தங்க சந்திரன், தங்க சூரியன் மற்றும் வெள்ளி பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
இவற்றை திருட முயற்சி நடந்துள்ளதாக அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து திருட்டுத்தனமாக தங்க பல்லி உள்ளிட்ட சிலைகளை மாற்ற முயற்சித்ததாகவும், அது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்து கோயிலுக்கு சென்று பார்த்த போது தங்க பல்லி சிலைகள் மாயமாகியிருந்ததாகவும் இது குறித்து காவல் துறையிடம் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக், மனுதாரரின் புகார் மீது ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
அதில், தங்கப் பல்லி சிலை திருட்டு ஏதும் நடைபெறவில்லை என்று தெரிய வந்ததை அடுத்து, புகாரை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்கும் படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN