Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 2 டிசம்பர் (ஹி.ச.)
சீனாவில் வெய்க்கி எனப்படும் கோ கேம் விளையாட்டு உலகம் முழுவது பிரபலமான விளையாட்டாக உள்ளது.
எதிராளிகளின் காய்களை சுற்றி வளைத்து, அவற்றைக் கைப்பற்றும் இந்த விளையாட்டு நுட்பங்கள் மற்றும் வியூகங்களை அடிப்படையாக வைத்து விளையாடப்படுகிறது.
இதனிடையே தேசிய அளவிலான கோ கேம் விளையாட்டுப் போட்டிகள் ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட கோ கேம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியின் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் கோவை சுந்தரபுரத்தில் உள்ள வி.எஸ்.செங்கோட்டையன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சஞ்சய், லக்ஷனா, பிருந்தா அமிர்தா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சிந்தனா, ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநவ், போத்தனூர் ரயில்வே உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த மதுமிதா, ஹர்ஷத், சம்ரிதா, ஸ்ரீ நாராயண மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் மிதிலேஷ் மற்றும் மேட்டுப்பாளையம் சிறுமுகை அம்பாள் பள்ளி ஹரி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தங்களது பிரிவுகளில் இறுதிப் போட்டிகளில் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை வீழ்த்தி மொத்தம் 13 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவர்களை சக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
Hindusthan Samachar / V.srini Vasan