Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 2 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த 2021-ல் காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்குடியை சேர்ந்த பூல்பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக இன்று
(டிச 02) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது,
பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அது போல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் போக்கு.
ஆகவே, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது. பொதுநல வழக்கை சிலரின் தனிப்பட்ட நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது நீதிமன்றத்திற்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அது போன்ற நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படாது.
அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்பப் பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். பொதுநல வழக்கு தொடர்பவர்கள் முறையான காரணம் இன்றி மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.
மேலும் மனுதாரர் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறினர்.
Hindusthan Samachar / vidya.b