Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 2 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் இறந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வை செய்திட உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவினர் நீதிபதி அஜய் ரஸ்தோகி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இன்று (டிச 02) கரூர் மாவட்டத்துக்கு வருகை தருவதாகவும்,
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள்/ அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் எதும் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்படி குழுவினரிடம் நேரடியாக இன்று காலை 10:30 மணி முதல் மனுக்கள் அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்திருந்தார்.
அதன்படி கரூர் சுற்றுலா மாளிகைக்கு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் இன்று காலை வந்தடைந்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனிடையே, கூட்ட நெரிசலில் உயிரிழந்த பழநியம்மாள், கோகிலாவின் பெற்றோர் பெருமாள், செல்வராணி ஆகியோர் மனு அளிக்க கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அதேபோல், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) மாவட்டச் செயலாளர் அருள் குமார் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்து நடந்த துயர சம்பவத்துக்கு விஜய்தான் காரணம் எனப் புகார் அளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b