Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 2 டிசம்பர் (ஹி.ச)
முருக பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவ. 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மலை மேல் மஹா தீபம் ஏற்றும் நிகழ்வு நாளை (டிச.,3) மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.
அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்று(டிச 02) இரவு 7:05 முதல் இரவு 7:30 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலையில் விடையாத்தி சப்பரத்தில் கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.
இரவு 7:05 முதல் இரவு 7:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தின கிரீடம் சாற்றப்படவுள்ளது. அதன்பின் சுப்பிரமணிய சுவாமி கைகளில் செங்கோலை, நம்பியார் பட்டர் வழங்க சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், சேவற்கொடி, வேல் சாற்றி, தீப, தூப ஆராதனைகள் நடைபெறவுள்ளன. அதன்பின் இரவு 8 மணியளவில் தங்கக்குதிரை வானகத்தில் சுவாமி தெய்வானையுடன் திருவீதி உலா நடைபெறும்.
கோயில் திருவிழா காலங்களில் சுவாமி, தெய்வானை தினம் ஒரு வாகனத்தில் ரத வீதிகளில் உலா வருவர். கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
நாளை பக்தர்கள் கோயில் முன் வாசல் வழியாக சென்று தரிசனம் முடித்து மடப்பள்ளி வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். மதியம் நடை சாத்தப்படாது.
ஆண்டுக்கு 2 முறை 16 கால் மண்டபம் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் தெப்பத் திருவிழா, கார்த்திகை திருவிழாவில் ரத வீதிகளில் வலம் வரும்.
நாளை காலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
Hindusthan Samachar / vidya.b