இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக மீளும் வரை இந்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் - பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்
சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.) இலங்கையில் டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்
Thiruma


Gd


சென்னை, 2 டிசம்பர் (ஹி.ச.)

இலங்கையில் டித்வா புயல் மழையால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் தாங்க முடியாத அளவிலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 1 நிலவரப்படி 366 பேர் உயிரிழந்துள்ளனர்; 367 பேர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் .

மொத்தத்தில் 25 மாவட்டங்களில் 3,16,366 குடும்பங்களைச் சேர்ந்த 11,51,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) 61,612 குடும்பங்களைச் சேர்ந்த 2,18,526 பேர் நாடு முழுவதும் உள்ள 1,564 பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த புயல், கனமழை மற்றும் வெள்ளம் இலங்கையின் தெற்கு பகுதிகள், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர் தாயகம், மேலும் மலையகப் பகுதிகள் என அனைத்திலும் பெரும் அழிவை ஏற்படுத்தி, பல உயிரிழப்புகளையும் விபத்துகளையும் உருவாக்கியுள்ளது. மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்த மிகப் பெரிய இயற்கை பேரிடராக டித்வா பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2004 சுனாமிக்குப் பிறகு இலங்கையில் நிகழ்ந்த இரண்டாவது மிகப் பெரும் உயிரிழப்புகளைக் கொண்ட இயற்கை பேரிடர் இதுவாகும். சுனாமியின் பொருளாதார நாசம் பெரும்பாலும் கடலோர பகுதிகளோடு மட்டுமே இருந்தது, டித்வா புயல் இலங்கை முழுவதும் மிகுந்த பொருளாதார அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன அல்லது முழுக்க மூழ்கியுள்ளன.

நூற்றுக்கணக்கான குளங்கள் மற்றும் ஏரிகள் கரைபுரண்டுள்ளன; பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. எண்ணிலடங்கா கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இலங்கை வழக்கமான நிலைக்குத் திரும்ப மற்றும் இதிலிருந்து மீள மிகவும் நீண்ட காலம் தேவைப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய ஒன்றிய அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்து மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளது ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக மீளும் வரை இந்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்; இந்திய அரசின் உதவி அனைத்து பாதிக்கப்பட்ட கிராமங்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எனக் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளேன் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ