Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 2 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் தங்கள் குழந்தையுடன் காரில் திருவண்ணாமலையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருமணத்தின்போது நளினி அணிந்திருந்த சுமார் 17 சவரன் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தார்.
சென்னை செல்லும் வழியில், திண்டிவனம் அடுத்த சலவாதி பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் அவர்கள் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டனர். பாதி தூரம் சென்ற பிறகு, காரில் நகைகள் வைத்திருந்த பை இல்லாததைக் கண்டு நளினி அதிர்ச்சியடைந்தார். சிற்றுண்டி அருந்தியபோது அந்தப் பையை உணவகத்தில் மறந்து வைத்துவிட்டு வந்தது அவருக்கு ஞாபகம் வந்தது.
உடனடியாக அவர், செஞ்சியில் பணிபுரியும் தனது உறவினரான சிறப்பு இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நகைப் பையை சலவாதி அம்மா உணவகத்தில் தவறவிட்ட தகவலைத் தெரிவித்தார்.
தகவல் அறிந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உடனடியாக அந்தப் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) மாணிக்கவாசகத்திடம் தகவல் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.ஐ. மாணிக்கவாசகம் துரிதமாகச் செயல்பட்டு அம்மா உணவகத்திற்குச் சென்று பார்த்தபோது, நளினி அமர்ந்திருந்த இருக்கையில் அந்தப் பை கேட்பாரற்று கிடந்தது.
அவர் உடனடியாக கடையின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தப் பையை ரோஷணை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, நகையைத் தொலைத்த தம்பதிகளான பிரசாந்த் - நளினி ரோஷணை காவல் நிலையத்திற்கு நேரில் வந்தனர்.
அவர்கள் தாங்கள் தொலைத்த பையில் இருந்த நகைகளைச் சரி பார்த்தபின், அந்தத் தங்க நகைகள் அடங்கிய பை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
தங்கள் நகைப் பையை மீண்டும் பெற்றுக் கொண்ட நளினி - பிரசாந்த் தம்பதியினர், போலீசாரின் நேர்மை மற்றும் துரித நடவடிக்கைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச்
சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN