Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 2 டிசம்பர் (H.S.)
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய இந்த எஸ்ஐஆர் பணிகள் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (நவ.30) அறிவித்திருந்தது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என்றும், இந்த பட்டியலில் இறப்பு, வேறு இடத்துக்கு குடிபெயர்வு உள்ளிட்ட வகைகளின்கீழ் இடம்பெறும் வாக்காளர்களின் விவரங்கள் நீக்கம் செய்யப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று SIR படிவங்களை கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். வேலுார் மாவட்டத்திலும் கடந்த 4 ஆம் தேதி முதல் BLO-க்கள் SIR பணிகளை மேற்கோண்டு வருகின்றனர். இங்குள்ள 5 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளர்களும், 1,314 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன. இந்த நிலையில், மாவட்டம் முழுவதிலும் 1.76 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூரில் நேற்று வரை 12 லட்சத்து 92 ஆயிரத்து 105 வாக்காளர்களுக்கு (99.16 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரத்து 925 வாக்காளர்களை கண்டறிந்து படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், வழங்கப்பட்ட படிவங்களில், 9 லட்சத்து 93 ஆயிரத்து 446 படிவங்கள் (76.24 சதவீதம்) பூர்த்தி செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர வாக்காளர்களில் இறப்பு, நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்வு, இரட்டை பதிவு, குறிப்பிட்ட முகவரியில் இல்லாதது உள்ளிட்ட வகைகளின் கீழ், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தரப்பில் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதில், அதிகபட்சமாக குடியாத்தம் தனித்தொகுதியில் 42 ஆயிரத்து 407 பேர், வேலுார் தொகுதியில் 40 ஆயிரத்து 943, காட்பாடியில் 32 ஆயிரத்து 295, கே.வி.குப்பம் தனித்தொகுதியில் 30 ஆயிரத்து 851, அணைக்கட்டு தொகுதியில் 30 ஆயிரத்து 178 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN