Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச)
ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் புத்தாண்டை முன்னிட்டு அதிக ஒலியுடன் பாட்டு போட்டு விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் அப்படி மீறி செயல்படுவோருக்கு வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, கோவை மாவட்ட வனப்பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டுகளில் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படலாம் என விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
வனப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஒலி பெருக்கி சத்தம் எழுப்பக்கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நபர் ஒருவருக்கு 2 ஆயிரம் முதல் 4,500 ரூபாய் வீதம் ரிசார்ட்டுகள் கட்டணம் வசூலிக்கிறது எனவும் முரளிதரன் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்நிலையில் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்படுவோருக்கு வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ