Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 டிசம்பர் (ஹி.ச.)
நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிய, 'ஒன்எக்ஸ்பெட்' என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த செயலியில், 6,000க்கும் மேற்பட்ட பினாமி வங்கி கணக்கு களை பயன்படுத்தி, சட்டவிரோத பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பணத்தை விளம்பரங்களுக்கு பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் பிரபலங்களான சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, பாலிவுட் நடிகர் சோனு சூட், நடிகையர் நேகா சர்மா, ஊர்வசி ரவுதாலா, மிமி சக்ரவர்த்தி, அங்குஜ் ஹஸ்ரா ஆகியோரிடம் அமலாக்க துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
இந்த செயலியை விளம்பரம் செய்ததற்காக இந்த பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை, சட்டவிரோதப் பணமாக கருதுவதால் அவற்றைப் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்நிறுவன விளம்பரங்களில் நடித்த பிரபலங்களின், 7.93 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதில், கிரிக்கெட் நட்சத்திரங்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரிடம் முறையே, 2.5 கோடி ரூபாய் மற்றும் 8.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னாவின் 6.64 கோடி ரூபாய் மற்றும் ஷிகர் தவானின் 4.55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM