Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
சென்னை மாவட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டப்பணியின் கீழ், மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, அந்நிலையத்தின் பிரதான குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
இதனால் 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 24-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி வரை (48 மணி நேரம்) திருவொற்றியூர் நீருந்து நிலையம் மற்றும் மணலி நீருந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.
எனவே. திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கு உட்பட்ட கத்திவாக்கம், எண்ணூர், எர்ணாவூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை மற்றும் சடையன்குப்பம் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b