Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.12.2025) நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 'தமிழரசு' சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரினை” வெளியிட்டார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவராகவும் மக்கள் பணியாற்றி, தனது கம்பீரமான குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்து புகழ்பெற்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபாவின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டுள்ளார்.
தமிழ் இசைக்கும், திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபாவின் பங்களிப்பைப் போற்றி பெருமை சேர்க்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்” என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மலரில், தந்தை பெரியர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா குறித்து தெரிவித்த கருத்துக்கள்,”மக்கத்து மலரே, மாணிக்கச் சுடரே” என்ற தலைப்பில் நாகூர் ஹனீபாவின் வாழ்க்கைப் பயணம்,
நாகூர் ஹனீபாவின் பேட்டி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும், பத்திரிகையாளர், எழுத்தாளர் ப.திருமாவேலன், அ.மா.சாமி, தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் நாகூர் ரூமி, எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது, எழுத்தாளர் கோம்பை எஸ்.அன்வர், பத்திரிகையாளர் கவின் மலர், எழுத்தாளர் எச்.ஹாமீம் முஸ்தபா, பத்திரிகையாளர் ப.கவிதா குமார், மாற்று சினிமா ஆர்வலர் நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர் எச்.பீர்முகம்மது, பேராசிரியர் மானசீகன், கவிஞர் நாகூர் காதர் ஒலி, பாடகர் ராஜபார்ட் ராஜாமுகமது ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
இம்மலரின் சிறப்பு அம்சமாக 'காலத்தால் அழியாத கந்தர்வ குரல்' என்னும் தலைப்பில் இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா பாடிய 'அழைக்கின்றார்... அழைக்கின்றார்... அண்ணா', 'காயிதே மில்லத் விரும்பிக்கேட்ட பாடல்', 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே', 'திராவிட நாட்டுப்பண்', 'இறைவனிடம் கையேந்துங்கள்', 'பொறுமை போதித்த ஐந்து கடமைகள்', மக்கத்து மலரே”, பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற 'எல்லோரும் கொண்டாடுவோம்', ராமன் அப்துல்லா திரைப்படத்தில் இடம்பெற்ற 'நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்' உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலர்” என்ற சிறப்பு மலரினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
Hindusthan Samachar / vidya.b