Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவில் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டவிரோத குடியேறிகளை சொந்த நாட்டுக்கு நாடு கடத்தினார்.
இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 330 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டங்கி பாதை எனும் சட்டவிரோத வழிமுறைகள் மூலம் அமெரிக்காவில் குடியேறி உள்ளனர்.
நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய ஏஜெண்டுகள் அவர்களை முறைகேடாக அனுப்பி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து டங்கி பாதை மோசடியை விசாரிக்க தொடங்கியது.
இந்த சட்டவிரோத செயலுக்கு பின்னால் இந்திய முகவர்கள், வெளிநாட்டு முகவர்கள், ஹவாலா பண மோசடி கும்பல் என சங்கிலி தொடர் கும்பல்களின் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பஞ்சாப், டெல்லி, அரியானா உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனைகளை மேற்கொண்டது. இந்த மோசடியின் பின்னணியில் 2-வது மற்றும் 3-வது மட்டத்தில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள், தனிநபர்களை பட்டியலிட்டு அவர்கள் சம்பந்தமான அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள ஒரு பயண நிறுவனத்தின் வளாகம் மற்றும் டெல்லி மற்றும் பானிபட்டில் (அரியானா) உள்ள சில தனிநபர்களின் இடங்கள் என 13 இடங்களில் சோதனையிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சோதனையில டெல்லி முகவரிடம் இருந்து ஏராளமான பணம், தங்க கட்டிகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்திருக்கிறது.
அது பற்றிய முழுமையான விவரங்கள் சோதனைகள் முடிந்த பின்னர் வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM