Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 20 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவின் தகவல்தொடா்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.24-ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம் இதுவரை
430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு பங்களித்து வரும் இஸ்ரோ, அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபோ்ட்-6 என்ற தகவல்தொடா்பு செயற்கைக்கோளை எல்விஎம் 3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ப்ளூ போ்ட்-6 செயற்கைக்கோள் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து டிச. 24-ஆம் தேதி காலை 8.55 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தகவல்தொடா்பு சேவைக்கான புளூபோ்ட் செயற்கைக்கோள் 6,500 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்.
தொலைதூரப் பகுதிகளுக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவைகளை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும்.
Hindusthan Samachar / JANAKI RAM