Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 20 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்க பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 1,545 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் முதன்முதலில் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் வட்டத்தில்தான் சோதனை செய்யப்பட்டது. தற்போது, கரூர் மாவட்டத்தில் 746 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் மூலம் 30,254 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் சமையல் பணி செய்யும் பட்டியலின பெண்கள் மீது சாதிய வன்கொடுமைகள் நிகழ்வது கரூர் மாவட்டத்தில் தொடர்கதை ஆகிவிட்டது.
இத்திட்டம் துவக்கப்பட்ட சில நாட்களிலேயே கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி வேலன் செட்டியூர் அரசு தொடக்கப் பள்ளியில் பட்டியலின பெண் சமைக்க கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதனால் அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக பள்ளிக்குச் சென்று, பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.
தற்போது அதன் தொடர்ச்சியாக இன்னொரு கொடுமை நிகழ்ந்துள்ளது. கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு காலை உணவு திட்டத்தில் கடந்த 4 மாதங்களாக சமையல் பணியாளராக பொன்னாம்பட்டியை சேர்ந்த நிரோஷா (35) வேலை பார்த்து வந்தார். இவர் பட்டியலின (அருந்ததியர்) சமூகத்தைச் சேர்ந்தவர். இதனிடையே, இவர் இங்கு சமைப்பது அப்பள்ளியில் பயிலும் ஒருதரப்பு மாணவர்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் பானுமதி, ''நீ சமையல் செய்தால், ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள். எனவே இனி சமைக்க வர வேண்டாம்.எனக் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நிரோஷா, இதுகுறித்து தோகமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார இயக்க மகளிர் திட்ட மேலாளர் சத்யா என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, அவரும் வேறு நபரை நியமித்து விட்டதாகவும், இனி பணிக்கு வர வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த சாதிய கொடுமை குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் நிரோஷா புகார் மனு அளித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN