நிவாரணம் பெற்ற விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
மயிலாடுதுறை, 20 டிசம்பர் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மேமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (32). விவசாயி. கடந்த மாதம் வீசிய டிட்வா புயல் மற்றும் மழையின் போது இவரது பசு மாடு உயிரிழந்துள்ளது. இதற்காக அரசு நிவாரணத்திற்கு ப
VAO Arrest


மயிலாடுதுறை, 20 டிசம்பர் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மேமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (32). விவசாயி.

கடந்த மாதம் வீசிய டிட்வா புயல் மற்றும் மழையின் போது இவரது பசு மாடு உயிரிழந்துள்ளது.

இதற்காக அரசு நிவாரணத்திற்கு பிரகாஷ் விண்ணப்பித்துள்ளார். மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் பரிந்துரை செய்ததன் பேரில் நிவாரணத் தொகை ரூபாய் 30,000 விவசாயி பிரகாஷ் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவாரணம் பெற பரிந்துரைத்ததற்காக கிராம நிர்வாக அலுவலரின் பெண் உதவியாளர் பெண்மீனியல் பாஸ்கரணி விவசாயி பிரகாஷின் வீட்டிற்கு சென்று ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு 3000 ரூபாய் தருவதாக கூறிய பிரகாஷ் இது குறித்து மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாகை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் அருள்பிரியா மற்றும் போலீசார் அறிவுறுத்தல்படி விவசாயி பிரகாஷ் மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கு மீனியல் பணியில் உள்ள பாஸ்கரணி இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய 3 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.

இதை மறைந்திருந்து கவனித்துக்கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் கணக்கு வழக்கு ஆவணங்களை சரிபார்த்து ஆதாரங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் பெண்மீனியல் பாஸ்கரணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN