Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடலைமுத்து (30). இவர் பந்தல் அமைக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு திருணமாகி ராமலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(45), நாசரேத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (42). இவர்கள் இருவரும் சாத்தான்குளம் தட்சமொழி முதலூர் சாலையில் செயல்படும் மது பாரில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி சாத்தான்குளம் தச்சமொழி மது பாரில் சுடலைமுத்து மது அருந்த சென்றுள்ளார். மது அருந்தி விட்டு காலி பாட்டிகளை கொடுத்து ரூ.10 கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர் சுந்தர் 5 ரூபாய் தான் தர முடியும் என்று கொடுத்துள்ளார். தனக்கு தர வேண்டிய 5 ரூபாய் எங்கே என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கு மது அருந்த வந்தவர்கள் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் சுந்தர், அவருடன் பாரில் பணிபுரியும் நாசரேத் ஜெகதீஷ் (42) ஆகியோர் பைக்கில் வந்து, அரசரடி மாரியம்மன் கோயில் அருகே உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுடலைமுத்துவிடம் சாதி பெயரை கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கைகலப்பு உருவாக இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் ஜெகதீஷ், சுந்தரை தடுத்து நிறுத்தி இங்கிருந்து செல்லுமாறு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்தனர். அப்போது சுடலைமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் சுந்தர் மற்றும் ஜெகதீஷ் இருவரும் அரிவாளை எடுத்து சுடலைமுத்துவை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற உறவினர்களை அரிவாளை காட்டி விரட்டினர்.
உயிர் பயத்தில் தப்பியோட முயன்ற சுடலைமுத்துவை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிந்து சுந்தர், ஜெகதீஷ் இருவரையும் கைது செய்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN