Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 டிசம்பர் (ஹி.ச.)
மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்க, பிரதமர் மோடி பங்கேற்கும், தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி, கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருடன், பிரதமர் மோடி உரையாடி, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார்.
உரையாடலின் போது, தேர்வுக்கான அணுகுமுறை, உடல்நலம் பேணுதல், மனநலனை பாதுகாத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள நிகழ்ச்சிக்கான முன்பதிவு, கடந்த 1ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம் 11ம் தேதி வரை முன்பதிவு நடக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, ஒரு கோடியே, 18 லட்சத்து, 22,663 மாணவர்கள்; 8 லட்சத்து 4094 ஆசிரியர்கள்; ஒரு லட்சத்து, 11,779 பெற்றோர் என, மொத்தம், ஒரு கோடியே, 27 லட்சத்து, 38,536 பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.
இதற்கு, 'https://innovateindia1.mygov.in/' என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
இதில், சிறப்பான கேள்விகளை அனுப்பியவர்களில், மாநிலத்துக்கு, 36 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர்.
Hindusthan Samachar / JANAKI RAM